நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன். வீட்டிற்கு தபாலில் குமுதம் வரும், புரியாவிட்டாலும் அதில் வரும் துணுக்குகளை எழுத்துக்கூட்டி படிப்பேன். அப்போது ப்ளாண்டி என்று ஒரு சித்திரக்கதை தொடர் வந்துகொண்டிருந்தது. அது மட்டும் படித்த ஞாபகம் இருக்கிறது. பிறகு உயர்நிலை பள்ளி நாட்களில் பாக்கெட் நாவல்கள், ராணி, கண்மனி, மாலைமதி, ராணிமுத்து என்று போனது. பள்ளி இறுதியில் பாலகுமாரனில் வந்து நின்றிருந்தேன். தொடர்ந்து டிப்ளமோ திருவண்ணாமலயில் படிக்கும் போது நூலகங்கள் அறிமுகமாயின. டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரேயிருந்த (இப்போது இடம் மாறி விட்டதாக நினைவு) மாவட்ட மைய நூலகம், அதே தெருவிலிருந்த கீதாஞ்சலி வாடகை நூலகம் என வாசிப்பின் பரப்பு விரிந்தது. பல நல்ல புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். ஒரு வருட இடைவெளிக்கு பின் பொறியில படிப்பை தொடரும் போதும் இந்த இரண்டு நூலகங்களும் வாசிப்பின் ருசியை தக்கவைத்துக் கொள்ள உதவின.
என் கல்லூரிக்காலங்களில் என் வாசிப்பின் திசை மாறுவதை உணர்ந்தேன். சுதாஜா சலிக்க தொடங்கி இருந்தார். ஆனால் அவர் எழுத்தின் மூலமே இலக்கிய வாசிப்புக்கான குறிப்புகள் கிடைத்தன. திருவண்ணாமலையிலிருந்த நண்பன் சக்தி (எ) பிரசன்னா மூலம் கிடைத்த புத்தகங்கள் இன்னும் சில வாசல்களை என்னுள் திறந்தன. ஜே. ஜே. சில குறிப்புகள், ஸீரோ டிகிரி, சாயாவனம், வானம் வசப்படும் என நிறைய புத்தகங்களை வாசிக்க முடிந்தது. வேலைக்கென சென்னை வந்த பிறகு இன்னும் நிறைய வாசிப்பதற்கான வழி கிடைத்தது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவு புத்தகங்கள் தாம். அசோக் பில்லர் பக்கத்தில் 10% கழிவோடு புத்தகங்கள் விற்கும் நிரந்தர கடையொன்று, லேண்ட்மார்க் என்று விரும்பிய புத்தகங்கள் வாங்கி வாசிக்க முடிந்திருக்கிறது.
இப்போதெல்லாம், நிறைய புத்தகங்கள் வாங்க முடிகிறது ஆனால் வாசிப்பதற்க்கான நேரம் குறைந்துவிட்டது. கல்லூரி படிக்கும் போது 600 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நாவலை மின்சாரம் இல்லாத இரவில் மெழுகுவர்த்தியின் உதவியோடு படித்து முடித்தது நினைவிற்கு வருகிறது. இப்போது அதே அளவு பக்கங்கள் கொண்ட ஆழிசூழ் உலகு வாசித்து முடிக்க இரண்டு வாரங்கள் ஆனது. ஆனாலும் புத்தங்களின் மீதான காதல் குறைவதில்லை. சிகரட் போல, மது போல இதுவும் ஒரு போதைதான் போலும்.
ஒவ்வொரு புத்தகமும் அது எழுதப்படுவதற்கு முன்பே அவற்றிற்க்கான வாசிப்பாளனை கண்டு கொள்கின்றது என்றே நினைக்கிறேன். புத்தகங்களோடு அலைந்து கொண்டே இருக்கும் என்னிடம் எப்போதும் யாரேனும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
”அப்படி என்னதான் இருக்கிறது புத்தகங்களில்?”
புன்னகைத்து விட்டு எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.
”அதைத் தான் நானும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.”
No comments:
Post a Comment