Thursday, November 29, 2012

பொன்மொழி

என் பள்ளி நாட்களில் காலை ப்ரேயரில் மாணவர்கள் பொன்மொழி சொல்வது வழக்கம். வருகை பதிவேட்டில் உள்ள வரிசைப்படி ஒவ்வொரு மாணவனின் முறை வரும். தெய்வசிகாமணி என்கிற என் வகுப்பு தோழன் என்னிடம் வந்து அவன் நாளை ப்ரேயரில் சொல்வதற்கு எளிதான பொன்மொழி ஒன்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். நானும் ”மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்கிற பொன்மொழியை சொல்லி கொடுத்தேன். விடுதியில் இரவு முழுவது அதை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

காலை ப்ரேயர்

மாணவர்களும், ஆசிரியர்களும் குழுமியிருந்தனர்.

தெய்வசிகாமணி தன் திருவாய் மலர்ந்தான்..

”பொன்னுவதெல்லாம் மின்னல்ல”

Thursday, June 28, 2012

உள்ளொளி

அறச்சீற்றத்தோடு கவிதை எழுத அமர்கையில்
குழந்தை அழுதது
விளையாட்டு காட்டிவிட்டு வந்து
குறைச்சீற்றத்தோடு துணுக்காவது எழுதலாமென்றால்
பால்காரன் வந்துவிட்டான்
நுரைச்சீற்றத்தோடு காஃபி போட்டுவிட்டு
மன எழுச்சிக்காக பாத்ரூம் போனேன்.

Tuesday, March 13, 2012

வாசிப்பு என்றொரு போதை

அய்யனாரின் கட்டுரையைப் படித்தவுடன் திருவண்ணாமலை நாட்கள், நூலகங்கள், வாசிப்புகள் என கலவையான நினைவுகள் ஆரம்பித்து விட்டது.

நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன். வீட்டிற்கு தபாலில் குமுதம் வரும், புரியாவிட்டாலும் அதில் வரும் துணுக்குகளை எழுத்துக்கூட்டி படிப்பேன். அப்போது ப்ளாண்டி என்று ஒரு சித்திரக்கதை தொடர் வந்துகொண்டிருந்தது. அது மட்டும் படித்த ஞாபகம் இருக்கிறது. பிறகு உயர்நிலை பள்ளி நாட்களில் பாக்கெட் நாவல்கள், ராணி, கண்மனி, மாலைமதி, ராணிமுத்து என்று போனது. பள்ளி இறுதியில் பாலகுமாரனில் வந்து நின்றிருந்தேன். தொடர்ந்து டிப்ளமோ திருவண்ணாமலயில் படிக்கும் போது நூலகங்கள் அறிமுகமாயின. டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரேயிருந்த (இப்போது இடம் மாறி விட்டதாக நினைவு) மாவட்ட மைய நூலகம், அதே தெருவிலிருந்த கீதாஞ்சலி வாடகை நூலகம் என வாசிப்பின் பரப்பு விரிந்தது. பல நல்ல புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். ஒரு வருட இடைவெளிக்கு பின் பொறியில படிப்பை தொடரும் போதும் இந்த இரண்டு நூலகங்களும் வாசிப்பின் ருசியை தக்கவைத்துக் கொள்ள உதவின.

என் கல்லூரிக்காலங்களில் என் வாசிப்பின் திசை மாறுவதை உணர்ந்தேன். சுதாஜா சலிக்க தொடங்கி இருந்தார். ஆனால் அவர் எழுத்தின் மூலமே இலக்கிய வாசிப்புக்கான குறிப்புகள் கிடைத்தன. திருவண்ணாமலையிலிருந்த நண்பன் சக்தி (எ) பிரசன்னா மூலம் கிடைத்த புத்தகங்கள் இன்னும் சில வாசல்களை என்னுள் திறந்தன. ஜே. ஜே. சில குறிப்புகள், ஸீரோ டிகிரி, சாயாவனம், வானம் வசப்படும் என நிறைய புத்தகங்களை வாசிக்க முடிந்தது. வேலைக்கென சென்னை வந்த பிறகு இன்னும் நிறைய வாசிப்பதற்கான வழி கிடைத்தது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவு புத்தகங்கள் தாம். அசோக் பில்லர் பக்கத்தில் 10% கழிவோடு புத்தகங்கள் விற்கும் நிரந்தர கடையொன்று, லேண்ட்மார்க் என்று விரும்பிய புத்தகங்கள் வாங்கி வாசிக்க முடிந்திருக்கிறது.

இப்போதெல்லாம், நிறைய புத்தகங்கள் வாங்க முடிகிறது ஆனால் வாசிப்பதற்க்கான நேரம் குறைந்துவிட்டது. கல்லூரி படிக்கும் போது 600 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நாவலை மின்சாரம் இல்லாத இரவில் மெழுகுவர்த்தியின் உதவியோடு படித்து முடித்தது நினைவிற்கு வருகிறது. இப்போது அதே அளவு பக்கங்கள் கொண்ட ஆழிசூழ் உலகு வாசித்து முடிக்க இரண்டு வாரங்கள் ஆனது. ஆனாலும் புத்தங்களின் மீதான காதல் குறைவதில்லை. சிகரட் போல, மது போல இதுவும் ஒரு போதைதான் போலும்.

ஒவ்வொரு புத்தகமும் அது எழுதப்படுவதற்கு முன்பே அவற்றிற்க்கான வாசிப்பாளனை கண்டு கொள்கின்றது என்றே நினைக்கிறேன். புத்தகங்களோடு அலைந்து கொண்டே இருக்கும் என்னிடம் எப்போதும் யாரேனும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

”அப்படி என்னதான் இருக்கிறது புத்தகங்களில்?”

புன்னகைத்து விட்டு எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.

”அதைத் தான் நானும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.”

Wednesday, February 29, 2012

எப்போதும் தோழி

இதை முகநூலில் படித்ததாக நினைவு. இதென்ன புதுக்கவிதையா ?, ஹைக்கூவா ? இல்லை வார்த்தைகளை அடுக்கி வைத்த கருத்தா ?. எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டுமே. நன்றாக இருக்கிறது இல்லையா ? அவ்வளவுதான்.

முதல் குழந்தை
இரண்டாவது தாய்
கடைசிக் காதலி


இந்த வரிகள் பேசுவது மனைவியை பற்றியதாக இருக்கிறது. கொஞ்சம் அட்வான்ஸாக, காதலிக்கும் (காதலிகளுக்கு அல்ல) இதை பொருத்திப் பார்த்து சந்தோஷப்படலாம், அதாவது இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் காதலே இறுதியானது என்ற முன் நிபந்தனையுடன்.

படித்ததில் இருந்து இதில் ஏதோ ஒன்று குறைகிறதே என் தோன்றி கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு வரியை இப்படி சேர்த்த போது சொல்ல வந்த விஷயம் முழுமையடைந்ததாக தோன்றியது.

முதல் குழந்தை
இரண்டாவது தாய்
கடைசிக் காதலி
எப்போதும் தோழி

அயல் வாழ்வு


அயல்நாடுகளில் வேலை செய்வதைப் பற்றியும், அதன் சம்பாத்தியங்கள் குறித்தான மிகையான கற்பனையும் நம் மக்களுக்கு எப்போதும் உண்டு. ”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி. இதன் பொருள் என்னவென்றால் பொருளீட்டுவதற்கு நில, தேச எல்லைகள் ஏதுமில்லை என்பதாகும். தகுதியான படிப்போடும், பணி அனுபவத்தோடும் இருப்பவர்களுக்கு இத்தகைய பணிச்சூழல் பெரிய விஷயமில்லை. ஆனால் கூலி தொழிளாலர்களாகவோ அல்லது குறைந்த சம்பளத்தில் அமர்த்தபடுபவர்களாகவோ இருப்பவர்களின் பாடு திண்டாட்டமானது. துயரமும், வலியும் நிறைந்தது.

முக்கியமாக, அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கு பணி நிமித்தம் வருகின்றவர்களுக்கு தகுந்த அடிப்படை வசதிகளோ, சட்ட பாதுகாப்போ இருப்பதில்லை. இங்கே பஹ்ரனை பொருத்த வரையில் மற்ற நாடுகளை விட சற்று பரவாயில்லை எனலாம். தேவாலயங்கள், கோவில்கள் இருக்க அனுமதிக்கிறார்கள். (கோபுரங்கள் கொண்ட வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை). கிருஷ்ணன், ஐயப்பன் கோவில்கள் என நம்மாட்களும் ஜமாக்கிறார்கள். மலையாளிகளால் இயங்குகிறது அரபு நாடுகள். ரோடு போடும் வேலையிலிருந்து, பெரும் முதலாளிகள் வரை அவர்கள்தாம்.

நான் முன்பு தங்கியிருந்த அறையின் அருகில் இருந்த ஓர் மளிகைக்கடையில் வேலை செய்யும் மலையாளி என்னோடு நன்றாக பழகுவார். நான் அப்போது தான் பஹ்ரைன் வந்திருந்த புதுசு. ஒரு நாள் அவருடைய பிண்ணனியை பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். தான் இருபது வருடங்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து வருவதாக சொன்னார். இனிமேலாவது ஊருக்கு போய் குடும்பத்துடன் வாழலாமே என்றேன். சம்பாதித்த பணத்தையெல்லாம் தனது சகோதரைகளும், உறவினர்களும் ஏமாற்றிவிட்டதாகவும், இனிமேல் ஊருக்கு சென்று வாழ்வதற்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இல்லையென்றார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆசையில் ”விசா”வுக்கு இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கு அங்கு குறைந்த சம்பளத்தில், கடுமையான வேலைகள் தரப்படுகின்றன. இரண்டு, மூன்று வருடங்கள் வேலை செய்தாலும் விசாவிற்கு கொடுத்த தொகை கூட தேறுவதில்லை. கடைசில், நொந்து போய் வேதனையோடு வீடு திரும்புபவர்கள் தான் அதிகம்.

என் நண்பருக்கு தெரிந்த ஒரு தமிழர் இங்கு பஹ்ரைனில் இருந்தார். பத்து வருடத்திற்கு மேலாக இங்கிருந்த அவரின், விசாவும், பாஸ்போர்ட்டும் எப்போதோ காலாவதியாகி விட்டிருந்தது. போலீஸின் கண்களுக்கு சிக்காமல் கிடைக்கிற சின்ன சின்ன வேலைகள் செய்து காலம் தள்ளிக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவரை போலீஸ் பிடித்துவிட்டது, ரமலான் நோன்பு மாதத்தில் மது விற்றதிற்காக. (பஹ்ரைனில் மதுவிலக்கு இல்லையெறாலும், ரம்லான் மாதம் மட்டும் கடுமையாக கடைபிடிக்கபடுகிறது). பிறகு அவரை சிறையிலடைத்து கடுமையான சித்ரவதைக்கு பின்னர் இந்தியாவிற்கு அனுப்பப்ட்டார். இவரை போல நிறைய பேர் பாஸ்போர்ட், விசா காலவதியாகியும் இங்கு இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் “அவுட் பாஸ்” என்ற பெயரில் அவர்கள் இலவச விமான டிக்கட்டில் திரும்ப அனுப்படுகிறார்கள். இப்படி இருப்பவர்களில் பெரும்பான்மையினோர் பாங்களாதேஷ் நாட்டவர்கள்.

எவ்வளவு சொன்னாலும் வெளிநாட்டு வேலை மீதான மோகம் நம் மக்களுக்கு குறையபோவதேயில்லை. சுய அனுபவத்தால் மட்டுமே கற்று கொள்வார்கள் போல.

கடந்த ஒரு வாரமாக என் அலுவலகத்தின் பக்கத்தில் கொஞ்சம் பேர் கழிவுநீர் குழாய்கள் புதைக்க ஆளுயரத்திற்கு பள்ளம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடுமையான உடலுழைப்பை கோரும் பணி. 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்கிறார்கள். அவர்களை ஓய்வெடுக்க கூட விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறான் அவர்களுக்கு மேலிருப்பவன். வியர்வை வழிய, கம்பெனி கொடுத்த பளீர் ஆரஞ்சு நிற சட்டையணிந்தபடி என்னை பார்ப்பவர்களுக்கு ஒரு நட்பு புன்னகையைத் தவிர வேறெதுவும் தர முடியாதவனாய் கடந்து செல்கிறேன்.

நிழற்படங்கள் உதவி
p4papyrus.blogspot.com
www.limeasia.net

Saturday, January 14, 2012

பொங்கல் நினைவுகள் - வாழ்த்துக்களின் வடிவங்கள்

ஓவியம் : இளையராஜா

பள்ளிக் காலங்களில் பொங்கல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பவித்திரம் நாடார் கடையில் பொங்கல் வாழ்த்தட்டைகள் வந்து விடும். கலப்பை சுமக்கும் உழவன், பொங்கும் பானை, கரும்பும் மஞ்சளுடன் இருக்கும் பெண் போன்ற அட்டைகளில் இருந்து, ரஜினி, கமல், மீனா என்று நடிக, நடிகையர் படம் போட்ட வாழ்த்தட்டைகள் என பல வகைகளில் மலிவான காகிதத்தில் இருக்கும். அந்த வயதில் வாழ்த்து அட்டைகள் வாங்குவதை விடவும் பெரிய விஷயமாக இருந்தது, அதை அனுப்புவற்கு ஒட்ட வேண்டிய தபால்தலைகளின் விலை, என்றாலும் விடாப்பிடியாக பொங்கல் வாழ்த்து அனுப்புவது மட்டும் தவறாது.

வாழ்த்து அனுப்ப வேண்டிய நண்பர்களின் ஊர்கள் பெரும்பாலும் பக்கத்திலேயே (அதிகபட்சம் 10 கி.மீ. தான்) இருக்கும், அதிலும் அவர்கள் வகுப்பு தோழர்களாகவே இருப்பர். வாழ்த்தட்டைகளை அனுப்பிவிட்டு, சரியாக போய் சேர்ந்ததா ? இல்லையா ? என்று கவலையோடு பொங்கல் விடுமுறை முடியும் வரையில் காத்திருப்பது ஒரு சுகம். அதே நேரத்தில் தபால்காரர் வரும்போதெல்லாம், எனக்கு எதாவது வாழ்த்து அட்டை வந்திருக்கிறதா ? என நச்சரிப்பதும் நடக்கும். நாம் வாழ்த்து அனுப்பிய நண்பன், நமக்கு எதுவும் வாழ்த்து அனுப்பவில்லை என்றால், ச்சே..இவனுக்கு போய் அனுப்பினோமோ ? என்று பள்ளி திறக்கும் வரையிலும் திட்டிக் கொண்டிருபேன். ஆனால் பள்ளிக்கு போனதும், நண்பன் நான் அனுப்பிய வாழ்த்தட்டையை பற்றி பெருமையோடும், சந்தோஷத்தோடும் வகுப்பு தோழர்களோடும் பகிர்ந்து கொள்ளும் போது, அவனை திட்டியதற்காக வருத்தப்பட தோன்றும். சில நேரங்களில் நாம் அனுப்பிய வாழ்த்தட்டைகளில் போதுமான தபால்தலைகள் ஓட்டாததால், பெறும் நண்பர்கள் அதற்கான அபராத தொகையினை செலுத்தியதும் உண்டு.

நானே வாழ்த்தட்டைகளை தயாரித்திருக்கிறேன், 15 பைசாவிற்கு கிடைக்கு அஞ்சல் அட்டையை வாங்கி, அதில் பொங்கல் பானை, கரும்பு என ‘ஸ்கெட்’ பேனாவினால் வரைந்து அனுப்புவேன். இல்லையென்றால் செய்தித்தாளை கட் செய்து, கொலாஜ் மாதிரியான வடிவங்களை ஒட்டி அனுப்புவேன். கூடுதலாக கவிதையும். கதிரவன், உழவு, மாடுகள், மஞ்சள் இப்படிபட்ட வார்த்தைகள் ஆங்காங்கே தெரிந்தால், அது தான் பொங்கல் கவிதை. பத்திரிக்கையில் வரும் பொங்கல் கவிதைகளை ’ரீமேக்’ செய்து சொந்த சரக்கு மாதிரி அனுப்புவதும் உண்டு.

பிறகு தொலைபேசிகளிலும், மின்னஞ்சல்களிலும், அலைபேசிகளிலும், குறுஞ்செய்திகளிலும் பொங்கல் வாழ்த்து ”ஹேப்பி பொங்கல் மச்சி” என்று சுருங்கிப் போய் விட்டது. வாழ்த்தட்டைகள் அனுப்பிய நண்பர்கள் இபோது, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டிருக்கலாம். ஃபேஸ்புக்கில் யாரோ அனுப்பிய பொங்கல் வாழ்த்தை ஒரு சின்ன சொடுக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது எழுந்த குற்றவுணர்வில் இதை எழுத ஆரம்பித்து விட்டேன்.

வாழ்த்துதலின் வடிவங்கள் யாதெனினும், பகிர்ந்து கொள்ளும் நண்பர்களின் அன்பின் அளவு குறைவதில்லை என்றே நினைக்கிறேன்.


இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே !

Thursday, January 5, 2012

ஐஃபோன் / ஐ-பேட் - தமிழ் தட்டச்சு உதவிக் குறிப்புகள்

கணினியில் தட்டச்சு செய்ய ஏகப்பட்ட மென்பொருட்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. ஆனால் இப்போதை ‘ஸ்மார்ட் போன்கள்’ என சொல்லபடும் நவீன யுக அலைபேசிகளில் தமிழில் தட்டச்சு செய்வது அவ்வளவு இலகுவானதாக இல்லை. முக்கியமாக, ஐஃபோன் / ஐ-பேட்களுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் (iPhone / iPad Apps) தமிழில் அதிகம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருக்கின்ற சில பயன்பாடுகளும் உபயோகமானதாக இல்லை. இதையும் தாண்டி தமிழில் தட்டச்ச சில பயன்பாடுகள் உதவிகரமாக உள்ளன. அப்படிபட்ட ஐஃபோன் / ஐ-பேட் பயன்பாடுகளைப் பற்றி பார்ப்போம்,

1. செல்லினம்

ஐஃபோனில் தமிழில் தட்டச்சு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள செல்லினம், பொனடிக் (phonetic) முறையில் தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்கிறது. அதாவது ஒரு எழுத்தை எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே ஆங்கிலத்தில் தட்டச்ச அதற்கான தமிழ் வடிவம் கிடைக்கும். உதாரணமாக விளையாட்டு என்ற தமிழ் சொல்லை தட்டச்ச ‘vilaiyaattu’ என்று ஆங்கிலத்தில் தட்டச்ச வேண்டும்.

செல்லினம் - முகப்பு


செல்லினம் - தட்டச்சு செயலி.

தட்டச்சு செய்த தமிழ் பத்தியை குறுஞ்செய்தி, மின்னஞ்சல், ட்விட்டர் மற்றும் முகநூல்ஆகியவற்றின் வழியாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது தேவைப்படும் பத்தியை காப்பி செய்து தேவையான இடங்களில் பேஸ்ட் செய்து கொள்ளலாம். தமிழில் தட்டச்சு செய்யும் போது நீங்கள் இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

செல்லினம் - வெளியீட்டுக் கருவிகள்.

செல்லினத்தின் மேம்பட்ட பதிப்பான 3.0.1 ஐ-பேடிலும் செல்லினத்தை பயன்படும் படியான வசதிகளோடு வெளியாகியுள்ளது. செல்லினம் iOS 4.0 மற்றும் அதற்கும் மேற்ப்பட்ட ஆப்பிள் இயங்குதளத்தில் மட்டுமே வேலை செய்யும்.

மேலதிக விபரங்களுக்கு :

http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8
http://sellinam.com


2. டைப் தமிழ் (Type Tamil)

செல்லினம் போலவே பொனடிக் தட்டச்சு முறையில் டைப் தமிழ் செயல்படுகிறது. ஐஃபோன் மற்றும் ஐ-பேட் ஆகியவற்றில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கபட்டிருக்கிறது. ஃபேஸ் புக், ட்விட்டர், ஜி-மெயில் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றில் தமிழ் உள்ளீடு செய்யலாம். ஆனால் இந்த பயன்பாடு செயல்படுவதற்கு இணைய இணைப்பு அவசியம். ஒரு வார்த்தையை தட்டச்சும்போது அதற்கான ஒத்த வார்த்தை பரிந்துரையையும் இது கொடுக்கிறது.

முகப்பு




வார்த்தை பரிந்துரை




தமிழில் மின்னஞ்சல்

மேலதிக விபரங்களுக்கு :

http://itunes.apple.com/is/app/type-tamil/id453450583?mt=8
http://facegroom.com/


3. ஐ-தமிழ் செயலி (iTamil for iPhone)

மற்றுமொரு ஐஃபோன் செயலி. ஐ-பேடுகளிலும் இயங்குகிறது. வழமை போலவே, ஃபேஸ்புக், மின்னஞ்சல், ட்விட்டர், மற்றும் குறுஞ்செய்திகளுக்கான தமிழ் உள்ளீடு செய்யலாம். இணைய இணைப்பில்லாத போதும் இது செயல்படுகிறது, ஆனால் ஒத்த வார்த்தை பரிந்துரை செய்வதில்லை.



செயலி முகப்பு




தமிழில் முகநூல் பதிவு






தமிழ் தட்டச்சு


மேலதிக விபரங்களுக்கு :

http://itunes.apple.com/us/app/itamil-for-iphone/id420139050?mt=8
http://www.indian-languages.com/home/tamil


4. ஐ-ட்ரான்ஸ்லிட்ரேட் (iTransliterate)

இணைய இணைப்பில் மட்டுமே இயங்கக் கூடிய செயலி இது. ஐஃபோன் மற்றும் ஐ-பேடில் இயங்கவல்லது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பத்து மேற்ப்பட்ட மொழிகளுக்கான பொனடிக் தட்டச்சு உதவியுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.

செயலி முகப்பு



தமிழ் மின்னஞ்சல்

மேலதிக விபரங்களுக்கு :

http://itunes.apple.com/us/app/itransliterate/id324679389?mt=8

http://karanmisra.com/qingwen/Qingwen.html

.........................................................................................................................

குறிப்பு : இந்த பதிவில் இலவசமாக கிடைக்கும் ஆப்பிள் ஐஃபோன்/ஐ-பேட் பயன்பாடுகள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட செயலிகள் எல்லாமே ஒரு சில பயன்பாடுகளில் (முகநூல், ட்விட்டர்) தமிழை உள்ளீடு செய்ய மட்டுமே பயன்படுகிறது. ஆனால் முழுமையான தமிழ் மொழிக்கான ஆதரவு ஐஃபோன் / ஐ-பேட்களில் இல்லை. அதற்கு நாம் ஆப்பிளை தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. எதிகாலத்தில் பெருகிவரும் தமிழ் ஆப்பிள் பயனர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழுக்கான ஆதரவு சேர்க்கப் படலாம்.