Monday, September 9, 2013

கால்களற்றவனின் கவிதை

வாழ்க்கை நம்மிடம் எப்போதும் கருணையை மட்டுமே பரிசளித்துக் கொண்டிருப்பதில்லை நம்மைப் போலவே. கூட்டத்தில் நடுவிலேயும் தனித்த மனதோடு திரிதல் துயரம். எல்லா விஷயங்களையும் நம்மால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, புறக்காரணிகள் பலவற்றையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. யதார்த்தத்தின் புரிதல் இருப்பினும் விளைவுகளை கடந்து செல்வது அவ்வளவு எளிதான ஒன்றாக இருப்பதில்லை. மனதில் பூதக்கண்ணாடி சிறிய துயரத்தையும் பெருக்கி அதன் முடிவற்ற பதிவுகளால் நம்மை அலைகழிக்க வைக்கிறது. இதே தர்க்கம் சந்தோஷத்தில் செல்லுபடியாவதில்லை. மனம் சந்தோஷத்தை மட்டும் அதே அளவோடு ஒரு கருமியின் லாவகத்தோடு கையாள்கிறது. இந்த சமநிலையற்ற மனதின் விசித்திரங்கள் பல.


மேலே எழுதியதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதில் எனக்கே நிறைய குழப்பங்கள் இருப்பதால் இதோடு ஃபுல் ஸ்டாப். எதையும் யோசிக்காமல் என்ன மனதில் தோன்றியதோ அதை அப்படியே எழுதியிருக்கிறேன். சந்தோஷமான மனநிலையில் இல்லாததால் இப்படி குழப்படியாக எழுத தோன்றியதோ என்னவோ. எதையோ சொல்ல ஆரம்பித்து வழிதவறிய குழந்தையின் மனநிலையோடு முடித்து விட்டிருக்கிறேன். பரவாயில்லை அறுந்த இழையின் முனையை கண்டு பிடித்துவிட்டு பிறகு தொடர்ந்தால் போயிற்று.

-----------------------------------------------------------------------------------------------------

புத்தகங்கள் வாசிப்பது குறைந்து இப்போது இல்லாமலே ஆகிவிட்டது. என் பெயர் சிவப்பு வாசிக்க தொடங்கி இன்னும் முடிக்கப் படாமல் காத்திருக்கிறது. சீக்கிரமே வசீகரனை சந்திக்க வேண்டும். பிறகு பின்னிரவில் சாவகாசமாக துருக்கிய தெருக்களில் நடந்து சென்று தேநீர் அருந்த வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------- 


என் உரைநடையின் வடிவம் வாசிப்பிற்கு நெருக்கமானதாக இல்லையோ என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. நாலைந்து பத்திகள் எழுதிவிட்டு இப்படி எதிர்பார்ப்பது எனக்கே ஓவராக தெரிகிறது. நிறைய எழுதிக்கொண்டே இருந்தால் தொடந்த பயிற்சியின் மூலம் ஒரு வடிவத்தை அடையலாம் என்பது புரிகிறது. பார்ப்போம். புனைவுகளில் முயன்று பார்க்க ஆசையிருக்கிறது. புனைவின் சுதந்திரம், அதன் கட்டற்ற தன்மை எனக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ளது. அ-புனைவை பொருத்தவரை எனக்கு சில தயக்கங்கள் இருக்கின்றன, இயல்பிலேயே கூச்ச சுபாவியான எனக்கு உறுதியான தரவுகளை முன்வைப்பது, அதை சரியானபடி நிறுவுவது போன்றவற்றை செய்ய பயமிருக்கிருக்கிறது அல்லது எப்படி செய்வது என்பது தெரியாமலிருக்கிறது. ஒரு வேளை வாசிப்பும் ,அனுபவமும் கற்று தரக்கூடும்.

-----------------------------------------------------------------------------------------------------

அக்டோபர் இறுதியில் ஊருக்கு போகிறேன்.மூன்று வாரக் குழந்தையாய் பார்த்து விட்டு வந்த என் மகன் கவினுக்கு இப்போது ஆறு மாதங்கள். இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி. கவினுடன் பட்டாசுகள் வெடித்து நானும் என் பால்யத்திற்கு திரும்ப காத்துக் கொண்டிருக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------

கடைசியாக இன்று முகநூலில் பதிந்த தலைப்பிடப்படாத எனது கவிதை,

கதவுகளற்ற வீடொன்றில்
தேநீர் அருந்தியபடி இருக்கிறான்
கால்களற்ற ஒருவன்.
மேசைக்கால்களில் உராய்ந்தபடி
நகர்கின்றன பூனைகள்.
உத்திரத்தின் வழியே கசியும் வெளிச்சம்
சர்ப்பமென அவன் மார்பில் நுழைகிறது.
இனிப்பில்லாத தேநீரின் மிச்சத்தை
தவிர்த்து பறக்கிறது ஈயொன்று
தூரத்து நாய்களின் குரைப்பில்
காதுவிடைத்து அவன்
பூனைகளை பார்க்கிறான்.
மெல்ல விரியும் வெளிச்சம்
வீட்டை நிறைத்து
வாசலில் வழிகிறது

No comments:

Post a Comment