Thursday, January 17, 2013

இன்னுமொரு வருடம்



புதுவருடம் பிறந்து ஒரு மாதம் முடியப்போகிற இந்த நேரத்தில் தான் ‘ரிவைண்ட்’ பதிவு எழுதுகிற நேரம் வாய்த்திருக்கின்றது. ”எப்படி எழுதுவது?” என்ற கேள்விக்கு சுஜாதாவின் பதில் “முதலில் எழுத ஆரம்பியுங்கள்.” என்பதாக படித்த நினைவு. ஓராண்டிற்கு முன் ஆரம்பித்த இந்த வலைப்பூவில் நான் எழுதியது மிகக்குறைவே. எழுத நினைக்கும் போதே ஒருவித சலிப்பு வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்த எழுத்து யாருக்காக? என்ற கேள்வியே அந்த சலிப்பின் மையம். சரி எனக்காக எழுதுகிறேன் என்று மறு பதில் கொடுத்தாலும், அதை ஏன் பொதுவெளியில் எழுத வேண்டும் ? உன்னுடைய நாட்குறிப்பிலேயே எழுதலாமே ? (நாட்குறிப்பையும் தொடுவதில்லை என்பது தனிக்கதை!!!) என்று சோம்பலில் சுகம் காணும் மனம் குறுக்கு கேள்விகளால் என்னை எழுத இயலாமல் செய்து விடுகிறது. நல்ல எழுத்தை இணையத்தில் வாசிக்கையில் எழுத வேண்டுமென்கிற விருப்பம் தோன்றி மெல்ல அது நீர்த்துப்போகும். இந்த புது வருடத்தில் வழக்கமான புத்தாண்டு உறுதிமொழியாக இல்லாமல் வாரம் ஒரு முறையாவது இங்கு எழுதிவிட வேண்டும் என நினைக்கிறேன். எல்லா தயக்கங்களையும் களைந்துவிட்டு எழுதுவதற்கு தடையாயிருக்கிற கேள்விகளையெல்லாம் புறந்தள்ளி எழுத வேண்டும். சென்ற ஆண்டில் புத்தகங்கள் படித்தது குறைவு. ஆனாலும் சிறந்த சில புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாங்கி வைத்த புத்தங்களை தூசி படிவதற்குள் வாசித்துவிட வேண்டும்.

2012 எனக்கு மிக முக்கியமான வருடமாக இருந்திருக்கிறது. என் திருமணம், எனக்கு இன்னும் பொறுப்பையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கணிசமான நண்பர்களை சந்திக்க முடிந்தது. நல்லதும் கெட்டதுமான வாழ்விற்கு நன்றி.

Thursday, November 29, 2012

பொன்மொழி

என் பள்ளி நாட்களில் காலை ப்ரேயரில் மாணவர்கள் பொன்மொழி சொல்வது வழக்கம். வருகை பதிவேட்டில் உள்ள வரிசைப்படி ஒவ்வொரு மாணவனின் முறை வரும். தெய்வசிகாமணி என்கிற என் வகுப்பு தோழன் என்னிடம் வந்து அவன் நாளை ப்ரேயரில் சொல்வதற்கு எளிதான பொன்மொழி ஒன்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். நானும் ”மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்கிற பொன்மொழியை சொல்லி கொடுத்தேன். விடுதியில் இரவு முழுவது அதை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

காலை ப்ரேயர்

மாணவர்களும், ஆசிரியர்களும் குழுமியிருந்தனர்.

தெய்வசிகாமணி தன் திருவாய் மலர்ந்தான்..

”பொன்னுவதெல்லாம் மின்னல்ல”

Thursday, June 28, 2012

உள்ளொளி

அறச்சீற்றத்தோடு கவிதை எழுத அமர்கையில்
குழந்தை அழுதது
விளையாட்டு காட்டிவிட்டு வந்து
குறைச்சீற்றத்தோடு துணுக்காவது எழுதலாமென்றால்
பால்காரன் வந்துவிட்டான்
நுரைச்சீற்றத்தோடு காஃபி போட்டுவிட்டு
மன எழுச்சிக்காக பாத்ரூம் போனேன்.

Tuesday, March 13, 2012

வாசிப்பு என்றொரு போதை

அய்யனாரின் கட்டுரையைப் படித்தவுடன் திருவண்ணாமலை நாட்கள், நூலகங்கள், வாசிப்புகள் என கலவையான நினைவுகள் ஆரம்பித்து விட்டது.

நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன். வீட்டிற்கு தபாலில் குமுதம் வரும், புரியாவிட்டாலும் அதில் வரும் துணுக்குகளை எழுத்துக்கூட்டி படிப்பேன். அப்போது ப்ளாண்டி என்று ஒரு சித்திரக்கதை தொடர் வந்துகொண்டிருந்தது. அது மட்டும் படித்த ஞாபகம் இருக்கிறது. பிறகு உயர்நிலை பள்ளி நாட்களில் பாக்கெட் நாவல்கள், ராணி, கண்மனி, மாலைமதி, ராணிமுத்து என்று போனது. பள்ளி இறுதியில் பாலகுமாரனில் வந்து நின்றிருந்தேன். தொடர்ந்து டிப்ளமோ திருவண்ணாமலயில் படிக்கும் போது நூலகங்கள் அறிமுகமாயின. டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரேயிருந்த (இப்போது இடம் மாறி விட்டதாக நினைவு) மாவட்ட மைய நூலகம், அதே தெருவிலிருந்த கீதாஞ்சலி வாடகை நூலகம் என வாசிப்பின் பரப்பு விரிந்தது. பல நல்ல புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். ஒரு வருட இடைவெளிக்கு பின் பொறியில படிப்பை தொடரும் போதும் இந்த இரண்டு நூலகங்களும் வாசிப்பின் ருசியை தக்கவைத்துக் கொள்ள உதவின.

என் கல்லூரிக்காலங்களில் என் வாசிப்பின் திசை மாறுவதை உணர்ந்தேன். சுதாஜா சலிக்க தொடங்கி இருந்தார். ஆனால் அவர் எழுத்தின் மூலமே இலக்கிய வாசிப்புக்கான குறிப்புகள் கிடைத்தன. திருவண்ணாமலையிலிருந்த நண்பன் சக்தி (எ) பிரசன்னா மூலம் கிடைத்த புத்தகங்கள் இன்னும் சில வாசல்களை என்னுள் திறந்தன. ஜே. ஜே. சில குறிப்புகள், ஸீரோ டிகிரி, சாயாவனம், வானம் வசப்படும் என நிறைய புத்தகங்களை வாசிக்க முடிந்தது. வேலைக்கென சென்னை வந்த பிறகு இன்னும் நிறைய வாசிப்பதற்கான வழி கிடைத்தது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவு புத்தகங்கள் தாம். அசோக் பில்லர் பக்கத்தில் 10% கழிவோடு புத்தகங்கள் விற்கும் நிரந்தர கடையொன்று, லேண்ட்மார்க் என்று விரும்பிய புத்தகங்கள் வாங்கி வாசிக்க முடிந்திருக்கிறது.

இப்போதெல்லாம், நிறைய புத்தகங்கள் வாங்க முடிகிறது ஆனால் வாசிப்பதற்க்கான நேரம் குறைந்துவிட்டது. கல்லூரி படிக்கும் போது 600 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நாவலை மின்சாரம் இல்லாத இரவில் மெழுகுவர்த்தியின் உதவியோடு படித்து முடித்தது நினைவிற்கு வருகிறது. இப்போது அதே அளவு பக்கங்கள் கொண்ட ஆழிசூழ் உலகு வாசித்து முடிக்க இரண்டு வாரங்கள் ஆனது. ஆனாலும் புத்தங்களின் மீதான காதல் குறைவதில்லை. சிகரட் போல, மது போல இதுவும் ஒரு போதைதான் போலும்.

ஒவ்வொரு புத்தகமும் அது எழுதப்படுவதற்கு முன்பே அவற்றிற்க்கான வாசிப்பாளனை கண்டு கொள்கின்றது என்றே நினைக்கிறேன். புத்தகங்களோடு அலைந்து கொண்டே இருக்கும் என்னிடம் எப்போதும் யாரேனும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

”அப்படி என்னதான் இருக்கிறது புத்தகங்களில்?”

புன்னகைத்து விட்டு எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.

”அதைத் தான் நானும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.”

Wednesday, February 29, 2012

எப்போதும் தோழி

இதை முகநூலில் படித்ததாக நினைவு. இதென்ன புதுக்கவிதையா ?, ஹைக்கூவா ? இல்லை வார்த்தைகளை அடுக்கி வைத்த கருத்தா ?. எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டுமே. நன்றாக இருக்கிறது இல்லையா ? அவ்வளவுதான்.

முதல் குழந்தை
இரண்டாவது தாய்
கடைசிக் காதலி


இந்த வரிகள் பேசுவது மனைவியை பற்றியதாக இருக்கிறது. கொஞ்சம் அட்வான்ஸாக, காதலிக்கும் (காதலிகளுக்கு அல்ல) இதை பொருத்திப் பார்த்து சந்தோஷப்படலாம், அதாவது இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் காதலே இறுதியானது என்ற முன் நிபந்தனையுடன்.

படித்ததில் இருந்து இதில் ஏதோ ஒன்று குறைகிறதே என் தோன்றி கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு வரியை இப்படி சேர்த்த போது சொல்ல வந்த விஷயம் முழுமையடைந்ததாக தோன்றியது.

முதல் குழந்தை
இரண்டாவது தாய்
கடைசிக் காதலி
எப்போதும் தோழி

அயல் வாழ்வு


அயல்நாடுகளில் வேலை செய்வதைப் பற்றியும், அதன் சம்பாத்தியங்கள் குறித்தான மிகையான கற்பனையும் நம் மக்களுக்கு எப்போதும் உண்டு. ”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி. இதன் பொருள் என்னவென்றால் பொருளீட்டுவதற்கு நில, தேச எல்லைகள் ஏதுமில்லை என்பதாகும். தகுதியான படிப்போடும், பணி அனுபவத்தோடும் இருப்பவர்களுக்கு இத்தகைய பணிச்சூழல் பெரிய விஷயமில்லை. ஆனால் கூலி தொழிளாலர்களாகவோ அல்லது குறைந்த சம்பளத்தில் அமர்த்தபடுபவர்களாகவோ இருப்பவர்களின் பாடு திண்டாட்டமானது. துயரமும், வலியும் நிறைந்தது.

முக்கியமாக, அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கு பணி நிமித்தம் வருகின்றவர்களுக்கு தகுந்த அடிப்படை வசதிகளோ, சட்ட பாதுகாப்போ இருப்பதில்லை. இங்கே பஹ்ரனை பொருத்த வரையில் மற்ற நாடுகளை விட சற்று பரவாயில்லை எனலாம். தேவாலயங்கள், கோவில்கள் இருக்க அனுமதிக்கிறார்கள். (கோபுரங்கள் கொண்ட வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை). கிருஷ்ணன், ஐயப்பன் கோவில்கள் என நம்மாட்களும் ஜமாக்கிறார்கள். மலையாளிகளால் இயங்குகிறது அரபு நாடுகள். ரோடு போடும் வேலையிலிருந்து, பெரும் முதலாளிகள் வரை அவர்கள்தாம்.

நான் முன்பு தங்கியிருந்த அறையின் அருகில் இருந்த ஓர் மளிகைக்கடையில் வேலை செய்யும் மலையாளி என்னோடு நன்றாக பழகுவார். நான் அப்போது தான் பஹ்ரைன் வந்திருந்த புதுசு. ஒரு நாள் அவருடைய பிண்ணனியை பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். தான் இருபது வருடங்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து வருவதாக சொன்னார். இனிமேலாவது ஊருக்கு போய் குடும்பத்துடன் வாழலாமே என்றேன். சம்பாதித்த பணத்தையெல்லாம் தனது சகோதரைகளும், உறவினர்களும் ஏமாற்றிவிட்டதாகவும், இனிமேல் ஊருக்கு சென்று வாழ்வதற்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இல்லையென்றார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆசையில் ”விசா”வுக்கு இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கு அங்கு குறைந்த சம்பளத்தில், கடுமையான வேலைகள் தரப்படுகின்றன. இரண்டு, மூன்று வருடங்கள் வேலை செய்தாலும் விசாவிற்கு கொடுத்த தொகை கூட தேறுவதில்லை. கடைசில், நொந்து போய் வேதனையோடு வீடு திரும்புபவர்கள் தான் அதிகம்.

என் நண்பருக்கு தெரிந்த ஒரு தமிழர் இங்கு பஹ்ரைனில் இருந்தார். பத்து வருடத்திற்கு மேலாக இங்கிருந்த அவரின், விசாவும், பாஸ்போர்ட்டும் எப்போதோ காலாவதியாகி விட்டிருந்தது. போலீஸின் கண்களுக்கு சிக்காமல் கிடைக்கிற சின்ன சின்ன வேலைகள் செய்து காலம் தள்ளிக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவரை போலீஸ் பிடித்துவிட்டது, ரமலான் நோன்பு மாதத்தில் மது விற்றதிற்காக. (பஹ்ரைனில் மதுவிலக்கு இல்லையெறாலும், ரம்லான் மாதம் மட்டும் கடுமையாக கடைபிடிக்கபடுகிறது). பிறகு அவரை சிறையிலடைத்து கடுமையான சித்ரவதைக்கு பின்னர் இந்தியாவிற்கு அனுப்பப்ட்டார். இவரை போல நிறைய பேர் பாஸ்போர்ட், விசா காலவதியாகியும் இங்கு இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் “அவுட் பாஸ்” என்ற பெயரில் அவர்கள் இலவச விமான டிக்கட்டில் திரும்ப அனுப்படுகிறார்கள். இப்படி இருப்பவர்களில் பெரும்பான்மையினோர் பாங்களாதேஷ் நாட்டவர்கள்.

எவ்வளவு சொன்னாலும் வெளிநாட்டு வேலை மீதான மோகம் நம் மக்களுக்கு குறையபோவதேயில்லை. சுய அனுபவத்தால் மட்டுமே கற்று கொள்வார்கள் போல.

கடந்த ஒரு வாரமாக என் அலுவலகத்தின் பக்கத்தில் கொஞ்சம் பேர் கழிவுநீர் குழாய்கள் புதைக்க ஆளுயரத்திற்கு பள்ளம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடுமையான உடலுழைப்பை கோரும் பணி. 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்கிறார்கள். அவர்களை ஓய்வெடுக்க கூட விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறான் அவர்களுக்கு மேலிருப்பவன். வியர்வை வழிய, கம்பெனி கொடுத்த பளீர் ஆரஞ்சு நிற சட்டையணிந்தபடி என்னை பார்ப்பவர்களுக்கு ஒரு நட்பு புன்னகையைத் தவிர வேறெதுவும் தர முடியாதவனாய் கடந்து செல்கிறேன்.

நிழற்படங்கள் உதவி
p4papyrus.blogspot.com
www.limeasia.net

Saturday, January 14, 2012

பொங்கல் நினைவுகள் - வாழ்த்துக்களின் வடிவங்கள்

ஓவியம் : இளையராஜா

பள்ளிக் காலங்களில் பொங்கல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பவித்திரம் நாடார் கடையில் பொங்கல் வாழ்த்தட்டைகள் வந்து விடும். கலப்பை சுமக்கும் உழவன், பொங்கும் பானை, கரும்பும் மஞ்சளுடன் இருக்கும் பெண் போன்ற அட்டைகளில் இருந்து, ரஜினி, கமல், மீனா என்று நடிக, நடிகையர் படம் போட்ட வாழ்த்தட்டைகள் என பல வகைகளில் மலிவான காகிதத்தில் இருக்கும். அந்த வயதில் வாழ்த்து அட்டைகள் வாங்குவதை விடவும் பெரிய விஷயமாக இருந்தது, அதை அனுப்புவற்கு ஒட்ட வேண்டிய தபால்தலைகளின் விலை, என்றாலும் விடாப்பிடியாக பொங்கல் வாழ்த்து அனுப்புவது மட்டும் தவறாது.

வாழ்த்து அனுப்ப வேண்டிய நண்பர்களின் ஊர்கள் பெரும்பாலும் பக்கத்திலேயே (அதிகபட்சம் 10 கி.மீ. தான்) இருக்கும், அதிலும் அவர்கள் வகுப்பு தோழர்களாகவே இருப்பர். வாழ்த்தட்டைகளை அனுப்பிவிட்டு, சரியாக போய் சேர்ந்ததா ? இல்லையா ? என்று கவலையோடு பொங்கல் விடுமுறை முடியும் வரையில் காத்திருப்பது ஒரு சுகம். அதே நேரத்தில் தபால்காரர் வரும்போதெல்லாம், எனக்கு எதாவது வாழ்த்து அட்டை வந்திருக்கிறதா ? என நச்சரிப்பதும் நடக்கும். நாம் வாழ்த்து அனுப்பிய நண்பன், நமக்கு எதுவும் வாழ்த்து அனுப்பவில்லை என்றால், ச்சே..இவனுக்கு போய் அனுப்பினோமோ ? என்று பள்ளி திறக்கும் வரையிலும் திட்டிக் கொண்டிருபேன். ஆனால் பள்ளிக்கு போனதும், நண்பன் நான் அனுப்பிய வாழ்த்தட்டையை பற்றி பெருமையோடும், சந்தோஷத்தோடும் வகுப்பு தோழர்களோடும் பகிர்ந்து கொள்ளும் போது, அவனை திட்டியதற்காக வருத்தப்பட தோன்றும். சில நேரங்களில் நாம் அனுப்பிய வாழ்த்தட்டைகளில் போதுமான தபால்தலைகள் ஓட்டாததால், பெறும் நண்பர்கள் அதற்கான அபராத தொகையினை செலுத்தியதும் உண்டு.

நானே வாழ்த்தட்டைகளை தயாரித்திருக்கிறேன், 15 பைசாவிற்கு கிடைக்கு அஞ்சல் அட்டையை வாங்கி, அதில் பொங்கல் பானை, கரும்பு என ‘ஸ்கெட்’ பேனாவினால் வரைந்து அனுப்புவேன். இல்லையென்றால் செய்தித்தாளை கட் செய்து, கொலாஜ் மாதிரியான வடிவங்களை ஒட்டி அனுப்புவேன். கூடுதலாக கவிதையும். கதிரவன், உழவு, மாடுகள், மஞ்சள் இப்படிபட்ட வார்த்தைகள் ஆங்காங்கே தெரிந்தால், அது தான் பொங்கல் கவிதை. பத்திரிக்கையில் வரும் பொங்கல் கவிதைகளை ’ரீமேக்’ செய்து சொந்த சரக்கு மாதிரி அனுப்புவதும் உண்டு.

பிறகு தொலைபேசிகளிலும், மின்னஞ்சல்களிலும், அலைபேசிகளிலும், குறுஞ்செய்திகளிலும் பொங்கல் வாழ்த்து ”ஹேப்பி பொங்கல் மச்சி” என்று சுருங்கிப் போய் விட்டது. வாழ்த்தட்டைகள் அனுப்பிய நண்பர்கள் இபோது, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டிருக்கலாம். ஃபேஸ்புக்கில் யாரோ அனுப்பிய பொங்கல் வாழ்த்தை ஒரு சின்ன சொடுக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது எழுந்த குற்றவுணர்வில் இதை எழுத ஆரம்பித்து விட்டேன்.

வாழ்த்துதலின் வடிவங்கள் யாதெனினும், பகிர்ந்து கொள்ளும் நண்பர்களின் அன்பின் அளவு குறைவதில்லை என்றே நினைக்கிறேன்.


இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே !