Thursday, January 5, 2012

நாளை மற்றுமொரு நாளே – அறியப்படாத உலகின் வெளிச்சங்கள்

ஜி.நாகராஜனின் இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியவை இரண்டு விஷயங்கள், ஒன்று ’நாளை மற்றுமொரு நாளே’ என்ற கவித்துவமான தலைப்பு மற்றொன்று ஜி.நா வின் வாழ்க்கை முறையும், அவர்தம் பிண்ணியும். கடந்த விடுமுறையில் இந்த நாவலை தேடிபோன நான், ஜி.நாகராஜனின் முழுத்தொகுப்பும் டிஸ்கவரியில் கிடைக்கப் பெற்றது.

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதாமல் விளிப்பு நிலை மனிதர்களின் வாழ்வை இயல்பாக, எந்த பாசங்கும் இன்றி எழுத ஜி.நாகராஜனால் முடிந்திருக்கிறது. காலத்தின் பிண்ணணியில் முக்கியத்துவம் இன்றி, பாத்திரங்களின் அக உணர்வும், உரையாடல்களும் கதையை சிக்கனமான வார்த்தைகளில் முன்னகர்த்திச் செல்கின்றன. கந்தனின் ஒரு நாளைய நிகழ்வுகள் தான் கதை. வாழ்வியலுக்காக எதையும் செய்ய தயங்காதவன் கந்தன். பாலியல் தொழிலில் தரகனாய், ’கஸ்டமரை’ மிரட்டி கூடுதல் பணம் பறிப்பவனாய், மனைவியையே தொழிலுக்கும் அனுப்புபவனாய், இயல்பாய் அவனுக்கான நியாயங்களோடு அவன் உலகம் விரிகிறது.

ஆங்கிலோ-இந்தியன் ஐரீனை எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் போட்டு ’வைத்து’ கொண்டிருக்கும் செட்டியார், பாலியல் தொழிலுக்கு வர ஆசைப்படும் கந்தனின் பக்கத்து குடிசை ராக்காயி என்கிற மோகனா, தொழில் காப்பாளர்களாய் இருக்கும் ’அத்தான்’கள், தரகர் அந்தோணி என கிளைகதை பாத்திரங்களிலும் விரவிக் கிடக்கும் அவல சுவையும், யதார்த்தமும் குறிப்பிடபட வேண்டியவை.

சமூக மதிப்பீடுகளைத் தாண்டி, அறம், ஒழக்கம், புனிதம் என எல்லாவித கட்டுக்களையும் தகர்த்து இயங்கி கொண்டிருக்கும் ஒரு உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஜி.நாகராஜன், பாலியல் தொழிலாளிகளைப் பற்றி பேசி நம் பரிதாபத்தையோ, எந்தவித கட்டுபாடுகளும் இன்றி வாழும் கந்தனை பேசி நம்மிடையே ஒழுக்க சம்பந்தமான விவாதத்தையோ உருவாக்க முயலவில்லை. மாறாக, நம்மை விளிப்புநிலை மக்களின் வாழ்வை அவர்களின் நியாயங்களோடு புரிந்துகொள்ள செய்கிறார்.

No comments:

Post a Comment