Saturday, January 14, 2012

பொங்கல் நினைவுகள் - வாழ்த்துக்களின் வடிவங்கள்

ஓவியம் : இளையராஜா

பள்ளிக் காலங்களில் பொங்கல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பவித்திரம் நாடார் கடையில் பொங்கல் வாழ்த்தட்டைகள் வந்து விடும். கலப்பை சுமக்கும் உழவன், பொங்கும் பானை, கரும்பும் மஞ்சளுடன் இருக்கும் பெண் போன்ற அட்டைகளில் இருந்து, ரஜினி, கமல், மீனா என்று நடிக, நடிகையர் படம் போட்ட வாழ்த்தட்டைகள் என பல வகைகளில் மலிவான காகிதத்தில் இருக்கும். அந்த வயதில் வாழ்த்து அட்டைகள் வாங்குவதை விடவும் பெரிய விஷயமாக இருந்தது, அதை அனுப்புவற்கு ஒட்ட வேண்டிய தபால்தலைகளின் விலை, என்றாலும் விடாப்பிடியாக பொங்கல் வாழ்த்து அனுப்புவது மட்டும் தவறாது.

வாழ்த்து அனுப்ப வேண்டிய நண்பர்களின் ஊர்கள் பெரும்பாலும் பக்கத்திலேயே (அதிகபட்சம் 10 கி.மீ. தான்) இருக்கும், அதிலும் அவர்கள் வகுப்பு தோழர்களாகவே இருப்பர். வாழ்த்தட்டைகளை அனுப்பிவிட்டு, சரியாக போய் சேர்ந்ததா ? இல்லையா ? என்று கவலையோடு பொங்கல் விடுமுறை முடியும் வரையில் காத்திருப்பது ஒரு சுகம். அதே நேரத்தில் தபால்காரர் வரும்போதெல்லாம், எனக்கு எதாவது வாழ்த்து அட்டை வந்திருக்கிறதா ? என நச்சரிப்பதும் நடக்கும். நாம் வாழ்த்து அனுப்பிய நண்பன், நமக்கு எதுவும் வாழ்த்து அனுப்பவில்லை என்றால், ச்சே..இவனுக்கு போய் அனுப்பினோமோ ? என்று பள்ளி திறக்கும் வரையிலும் திட்டிக் கொண்டிருபேன். ஆனால் பள்ளிக்கு போனதும், நண்பன் நான் அனுப்பிய வாழ்த்தட்டையை பற்றி பெருமையோடும், சந்தோஷத்தோடும் வகுப்பு தோழர்களோடும் பகிர்ந்து கொள்ளும் போது, அவனை திட்டியதற்காக வருத்தப்பட தோன்றும். சில நேரங்களில் நாம் அனுப்பிய வாழ்த்தட்டைகளில் போதுமான தபால்தலைகள் ஓட்டாததால், பெறும் நண்பர்கள் அதற்கான அபராத தொகையினை செலுத்தியதும் உண்டு.

நானே வாழ்த்தட்டைகளை தயாரித்திருக்கிறேன், 15 பைசாவிற்கு கிடைக்கு அஞ்சல் அட்டையை வாங்கி, அதில் பொங்கல் பானை, கரும்பு என ‘ஸ்கெட்’ பேனாவினால் வரைந்து அனுப்புவேன். இல்லையென்றால் செய்தித்தாளை கட் செய்து, கொலாஜ் மாதிரியான வடிவங்களை ஒட்டி அனுப்புவேன். கூடுதலாக கவிதையும். கதிரவன், உழவு, மாடுகள், மஞ்சள் இப்படிபட்ட வார்த்தைகள் ஆங்காங்கே தெரிந்தால், அது தான் பொங்கல் கவிதை. பத்திரிக்கையில் வரும் பொங்கல் கவிதைகளை ’ரீமேக்’ செய்து சொந்த சரக்கு மாதிரி அனுப்புவதும் உண்டு.

பிறகு தொலைபேசிகளிலும், மின்னஞ்சல்களிலும், அலைபேசிகளிலும், குறுஞ்செய்திகளிலும் பொங்கல் வாழ்த்து ”ஹேப்பி பொங்கல் மச்சி” என்று சுருங்கிப் போய் விட்டது. வாழ்த்தட்டைகள் அனுப்பிய நண்பர்கள் இபோது, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டிருக்கலாம். ஃபேஸ்புக்கில் யாரோ அனுப்பிய பொங்கல் வாழ்த்தை ஒரு சின்ன சொடுக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது எழுந்த குற்றவுணர்வில் இதை எழுத ஆரம்பித்து விட்டேன்.

வாழ்த்துதலின் வடிவங்கள் யாதெனினும், பகிர்ந்து கொள்ளும் நண்பர்களின் அன்பின் அளவு குறைவதில்லை என்றே நினைக்கிறேன்.


இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே !

No comments:

Post a Comment